தேரோடும் வீதியிலே....
"திருவாரூர்த் தேரழகு; திருவிடைமருதூர்த் தெருவழகு" என்பது தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வழங்கிவரும் முதுமொழியாகும். ஊர் அமைப்பில் பிரதானமாகத் திகழ்வது தேரோடும் வீதிகளே. பண்டைக் காலத்தில் மதுரை நகரின் அமைப்பு தாமரை மலரை ஒத்ததாக இருந்தது என்று பரிபாடல் சுட்டும். மாடங்கள் சூழ் மதுரையில் தேர்வலம் வருதலையொட்டியே கீழ இரதவீதி, மேலஇரத வீதி, தெற்கு இரதவீதி, வடக்கு இரதவீதி என்று இப்போதும் வழங்கப்படுகிறது. தேர் என்ற ஊர்தி பண்டைக் காலத்தில் போக்குவரவிற்கும், போர் செய்வதற்கும் மட்டுமே பயன்பட்டு வந்தது. பிற்காலங்களில் இறைவன் குடிகொள்ளும் நகரும் கோயிலாக மாறிவிட்டது.
சொல்லும் பொருளும்:
தமிழில் "தேர்" என்று வழங்கப்பெறும் சொல் வடமொழியில் "இரதம்" என்று அழைக்கப்படுகிறது. தேர் என்ற சொல் தமிழில் "உயர்ந்த" என்ற பொருளைக் குறிக்கும். இரும்பினால் ஆக்கப்பட்டதும், எளிதிற் செல்லத்தக்க உருளைகளையுடையதும், பரியங்க இருக்கையுடையதும், தாமே தூக்கி அசையத்தக்க படிகளையுடையதும், நடுவமைந்த இருக்கையில் அமர்ந்து நடத்தத்தக்க தேர்ப்பாகனையுடையதும், அம்பு, வாள் முதலிய போர்க்கருவிகளையுடையதுமான நடுவிடத்தையுடையதும், விரும்பியதும், விரும்பிய வண்ணம் நிழலைச் செய்வதும், அழகுமிக்கதும் சிறந்த குதிரைகளையுடையதுமானது "தேர்" என்றும் , பல சக்கரங்கள், ஆர், தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு, கிடுகு, முதலிய உறுப்புகளால் ஆக்கப்பட்டு இரண்டு முதல் பல குதிரைகளால் இழுக்கப்படுவது "இரதம்" என்றும் பொருள் விளக்கம் தருகிறது அபிதான சிந்தாமணி. "இரதம்" என்ற சொல்லிற்குப் புணர்ச்சி, தேர், பல், சாறு, அன்னரசம், சுவை, இனிமை, வாயூறு நீர், வண்டு, பாதரசம், இரசலிங்கம், பாவனை, அரைஞாண், மாமரம், கால், உடல், வஞ்சி மரம், வாகனம், எழுதுவகை, அனுராகம், நீர், வலி, நஞ்சு, இத்தி, ஏழுவகைத் தாதுக்களில் ஒன்று என்ற 25 வகைப் பொருட்களைத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. தேர் என்பது "உற்சவ மூர்த்தியை வைத்து நீண்ட வடக்கயிற்றைக் கொண்டு இழுத்துச் செல்லப்படும் கோபுரம் போன்ற மேல் அமைப்பையும், பெய சக்கரங்களையும் கொண்ட கோயில் வாகனம்" என விளக்கம் தருகிறது கியாவின் தற்காலத் தமிழ் அகராதி.

பண்டைக் காலத்தில் அரசர்களும், போர் வீரர்களும், தேரின் மீது நின்று போர் செய்யும் செயல் மிகவும் கடினமானது. ஆயகலைகள் அறுபத்து நான்கில் "இரத பரீட்சை" யும் ஒன்று. இராமபிரானின் தந்தை பத்து திசைகளிலும் தேனைச் செலுத்தும் திறமை பெற்றிருந்ததால் "தசரதன்" என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தேர் அமைப்பு:
தேர் கோயிலின் கருவறை போன்றே தேரும் உபபீடம், அதிட்டானம், பாதம், விமானம் போன்ற உறுப்புகளால் அமைந்திருப்பதால் "கோயிலின் மறுவடிவம்" என்றும், "நகரும் கோயில்" என்றும் அழைக்கப்படுகிறது. தேர், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், அழகிய வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் முதலியவற்றால் அலங்கக்கப்பட்டிருக்கும். தேரினை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என மானசாரமும், விட்டுணு தத்துவ சம்கிருதையும் இலக்கணம் வகுத்திருக்கின்றன. மானசாரம் தேரின் அமைப்பு முறையையும், அதில் படிமங்கள் அமையவேண்டிய இடங்களையும் வரையறை செய்கின்றது. விட்டுணு தத்துவ சம்கிருதை "இரத நிர்மாணப்படலம்" முழுவதும் தேர் செய்யும் நியதிகளை விளக்குகிறது. தேர் செய்ய உறுதியும் வலிமையும் கொண்ட இலுப்பை மரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தேர் நிறுத்தி வைக்கும் இடத்தை "தேர்முட்டி" என்று வழங்குவர். தேர் முட்டி நிற்கும் இடம் தேர்முட்டி.
தேரின் வகைகள்:
தேரினை அதன் பயன்பாட்டின் அடிப்படையில் நாள்தோறும் போக்குவரவிற்குப் பயன்படும் தேர், போருக்குப் பயன்படும் தேர், கடவுளர் வீதி உலா வரும் தேர் என்றும், அமைப்பின் அடிப்படையில் நாகரம் (சதுர வடிவம்), திராவிடம் (எண்பட்டை வடிவம்), வேசரம் (வட்டவடிவம்), சட்டத்தேர் (மாடுகளால் இழுக்கப்படும் மிகச்சிறிய அடிப்பாகம் கொண்டு விமானம் போன்ற அமைப்பு) என்றும், பயன்படும் பொருட்கள் அடிப்படையில் மரத்தேர், கற்றேர், தங்கத்தேர், சட்டத்தேர் (உறுதியான நான்கு சக்கரங்களுடன் கூடிய அடிப்பாகம், மேல்பகுதி முழுவதும் சட்டங்களால் கட்டப்படுவது) என்றும் பல வகைகள் உண்டு.
காலந்தோறும் தேர்:

தொல்காப்பியம் முதல் இன்று வரை தேர் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. போர்ப் படைகளிலே தேர்ப்படை, குதிரைப்படை, காலாட் படை, யானைப் படை என்ற நால்வகைப் படைகள் குறித்துத் தொல்காப்பியர்,

"தேரும் யானையும் குதிரையும் பிறவும்
ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்பர்"
(தொல். 1158)

என்று குறிப்பிடுகிறார். வெற்றிபெற்ற மன்னனை வாழ்த்தி முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை ஆகியவற்றை நிகழ்த்தியதாகக் குறிப்புகள் உள.

சங்க இலக்கியங்களிலும் தேர் பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. யானை, தேர், குதிரை, காலாள் ஆகிய நாற்படைகளும் உடைய உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி, தேல் வரும் போது பொலிவோடும், வலிவோடும் காட்சி தருவான் எனப் பரணர் பாடுகிறார். பல்வேறுபட்ட உருவங்களில் அமைந்த பல தேர்கள் இருந்தமையால் உருவப் பஃறேர் (பல + தேர்) என்ற அடைமொழியுடன் இச்சோழ மன்னன் அழைக்கப்பெறுகிறான்.

பாரி என்ற வள்ளல் முல்லைக் கொடிக்குத் தனது தேரைப் பந்தலாக விட்டுச் சென்றுள்ள செய்தியையும் அறியமுடிகிறது. சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தேர் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

மனுநீதிச் சோழன் நீதியை நிலைநாட்டத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்றான் என்ற செய்தியை,

"வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்"
(சிலம்பு . 20, 53-55)

என்ற சிலப்பதிகார அடிகள் உணர்த்தும்.

தமிழகக் கோயிற்கலை வரலாற்றின் முதல்வர்களான பல்லவர்கள் குடைவரைக் கோயில்களையும், ஒற்றைக் கல் கோயில்களையும் கட்டத் தொடங்கினர். மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள், விமானத்தைப் போலவும், தேர் போலவும் உள்ளமையால் "பஞ்சபாண்டவ இரதங்கள்" என்று மக்கள் இவற்றை அழைக்கத் தொடங்கினர். ஆனால் இது தவறான கருத்தாகும். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனநாட்டுப் பயணி பாகியான் தான் கண்ட பௌத்தமதத் தேரோட்ட விழா பற்றிய செய்திகளைத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பன்னிரு திருமுறைகளில் தேர் பற்றிய செய்திகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. திருநாவுக்கரசர் "ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே" என்று பாடுகிறார். இன்று நாவுக்கரசர் பாடிய ஆழித்தேர் இல்லை. அது தீக்கு இரையாகிவிட்டது. பெரிய புராணத்தில் சேக்கிழார், சிதம்பரம், சீர்காழி, திருமறைக்காடு, திருவான்மியூர், திருப்புவனம், திருப்புன்கூர், திருநறையூர், திருநல்லூர், திருசேய் நல்லூர் போன்ற ஊர்களில் தேர்த் திருவிழாக்கள் சிறப்பாக நடந்ததாகப் பாடியுள்ளார்.

சேக்கிழார், மனுநீதிச் சோழன் வாழ்ந்த திருவாரூர் நகரின் அழகைப் பெரியபுராணத்தில் திருநகர்ப்படலத்தில் சிறப்பிக்கிறார். திருவாரூர் ஆழித்தேர் எண்கோணமாக இல்லாமல் 20 பட்டைகளாக அலங்கக்கப்படுவது தனிச்சிறப்பாகும்.

தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களில் உலாவும் ஒன்று. முதல் உலாவான திருக்கயிலாய ஞான உலாவில் சிவபெருமான் தேரில் உலா வந்த சிறப்பினைச் சேரமான் பெருமாள் நாயனார் பாடுகிறார். மற்றொரு சிற்றிலக்கிய வகையான பிள்ளைத் தமிழின் பருவங்களில் குறிப்பிடத்தக்கது சிறுதேர் உருட்டல் ஆகும். ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்கு மட்டுமே உரிய பருவமாக இதனைக் குறிப்பிடுவர்.

பயணம் செய்யும் ஊர்தியாக இருந்த தேரினைப் பிற்காலங்களில் ஊராத கற்றேராகவும் வடிக்கத் தொடங்கினர். 12-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கோயில்களில் கருவறைக்கு முன் சக்கரங்களால் அமைந்த மண்டபங்கள் தேர் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டன. அம்மண்டபங்களைக் குதிரை, யானை போன்றவை இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப்படும் கலைப்பாணி தோன்றியது. (சான்று : தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில்). அதனைத் தொடர்ந்து விசய நகரப் பேரரசை ஆண்ட மன்னர்களும் கல்லால் ஆன தேர்களைச் செய்யத் தொடங்கினர். விசய நகர மன்னர்களின் தொடர்பால் ஹம்பியில் மிகப்பெய ஊராத கல்தேர் காண்போரைக் கவரும் வகையில் வடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விசயநகரப் பேரரசை வழி நடத்திய மன்னர்கள், கோயிலின் பிற பகுதிகளான மண்டபங்கள், தேர்கள் முதலியவற்றை அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் வடித்தனர். இதனால் தேர்கள் புதிய பொலிவினைப் பெறத் தொடங்கின. எனவே மதுரை நாயக்கர்கள் காலம் தேர்களின் பொற்காலமாகவே திகழ்ந்தது என்றால் அது மிகையாகாது.

தேர்கள் குறித்தும், தேர்த் திருவிழா குறித்தும் திருவில்லிபுத்தூர், திருவரங்கம், திருசேய்நல்லூர், மதுரை ஆகிய இடங்களில் உள்ள கோயிற்கல்வெட்டுகளில் பல அய செய்திகள் கிடைக்கின்றன. சித்திரக் கவிகளில் ஒன்று "இரத பந்தம்". பாட்டைத் தேர் போலப் படம் வரைந்து ஒவ்வொரு எழுத்தாக எழுதிப் பாட்டாக்கி இருப்பர். இது புதுக்கவிதையின் முன்னோடி.

வள்ளுவர் கோட்டம்:

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டில்" வள்ளுவனுக்குக் கோட்டம் சமைக்கும் முயற்சியில் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் ஈடுபட்டார். அதன் விளைவாகச் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது. திருவாரூர்த் தேரையே சென்னை மாநகருக்குக் கொண்டு வந்ததுபோல் வள்ளுவர் கோட்டத்தின் மணிமுடியாய், காண்போரின் கருத்தைக் கவரும் வண்ணம் உயர்ந்து நிற்கும் சிற்பத்தேர் அமைந்துள்ளது. சிற்பத்தேரின் கருவறையில் திருக்குறளின் முப்பாலைக் குறிக்கும் வகையில் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அழகிய பீடத்தில் ஒளிமிகுந்த கருங்கல்லில் திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இச்சிற்பத்தேன் தனிச்சிறப்பாகும். நான்கு சக்கரங்கள் கொண்ட இச்சிற்பத் தேரை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வதுபோல் செதுக்கப்பட்டுள்ளது.

தங்கத்தேர்:
மக்களின் வழிபாட்டு முறைகளில் வேண்டுதலும் ஒன்றாகும். தாம் நினைத்த காரியம் நிறைவேறினால் தங்கத் தேர் இழுப்பதாக வேண்டிக் கொள்வர். தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், சென்னை (கபாலீசுவரர் கோயில்), திருத்தணி, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் உள்ள கோயில்களில் தங்கத்தேர் உள்ளது. இங்குள்ள கோயில்களின் உள்பிரகாரங்களில் "தங்கத்தேர்" இழுத்து வரப்படும். சென்னை கபாலீசுவரர் கோயிலில் உள்ள தங்கத்தேர் 11.5 கிலோ தங்கம் 130 கிலோ வெள்ளி கலந்து ரூ.75 இலட்சம் மதிப்பில் செய்யப்பட்டு நடைபெற்றது. இத்தங்கத் தேனைக் கட்டணம் செலுத்தி இழுத்துத் தங்களின் வேண்டுதலை மக்கள் நிறைவேற்றுகின்றனர்.
தேர்த் திருவிழாவின் நோக்கம்:

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட இயலாத முதியவர்கள், நோயாளிகள் ஆகியோருக்காக இறைவனே கோயில் விமானம் போன்ற அமைப்புடைய தேரில் ஒளி ஏற்றி அவர்களின் இல்லம் தோறும் சென்று அருள் வழங்கும் முகமாகத் தேர்த் திருவிழாக்களைச் சான்றோர்கள் ஏற்படுத்தினர். பெரும்பாலும் அனைத்து ஊர்களிலும் உள்ள கோயில்களில் வருடத்தில் ஒரு முறையாவது பிரம்மோத்சவ விழா (பத்துநாள்) சிறப்பாக நடைபெறும். விழாவின் போது எட்டாவது நாள் அன்று இறைவன் தேரில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் தில்லையில் (சிதம்பரம்) மட்டும் நடராசப் பெருமாள் இரண்டு முறை திருவீதியுலா (ஆனி, மார்கழி) வருகிறார். திருத்தேரின் வடம் பிடித்துத் தேரினை இழுப்பதால் கயிலையிலும், வைகுந்தத்திலும் இடம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.

தேர்த்திருவிழா முடிந்த அடுத்தநாள் தேர் சென்ற தடம் முழுவதும் பெண்கள் விழுந்து வணங்கித் தங்களது வேண்டுதல்களை இறைவனிடம் வேண்டிக்கொள்வர். இந்நிகழ்ச்சி "தேர்த்தடம் பார்த்தல்" என்று அழைக்கப்படுகிறது. தேர்த் திருவிழாவின்போது தேர் நிற்கும் இடத்திலிருந்து கோயிலின் பிரகாரத்தைச் சுற்றித் தொடங்கிய இடத்திற்கே வருதலை "நிலைக்கு வருதல்" என்பர். தேர்த் திருவிழா சிறப்பாக நடத்தி முடிப்பது பெரியசெயலாகும். இவ்வாறு தேர் பழைய இடத்திற்கு வராத சூழ்நிலை ஏற்பட்டால் அந்த ஊருக்குத் தீங்கு ஏற்படும் என்று மக்கள் நம்புகின்றனர்.

திருவாரூர்த் தேர்த்திருவிழா:

தேர் என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவாரூரே. இங்கு மனுநீதித் (ஊராத கல்தேர்) தேர் உள்பட மூன்று தேர்கள் இருக்கின்றன. திருநாவுக்கரசர் பாடிய ஆழித்தேர் தீப்பிடித்துச் சிதைந்து விட்டது. பிறகு பெல் (BHEL) நிறுவனம் ஒரு மிகப்பெய தேரைத் தயாரித்து வழங்கியுள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் தேருக்கு எழுந்தருளும் போது பொற்பூவும், வெள்ளிப்பூவும் வாரி இறைப்பதால் ஆயிரம் பொன் வழங்கியவர் என்ற பெயரையும் இங்குள்ள இறைவன் பெறுகிறார். இங்குள்ள இறைவனின் பெயர் வீதி விடங்கர் ஆவார். "விடங்கர்" என்ற சொல் உளியால் செதுக்கப்படாதவர்; ஆண்மையுடையவர்; அழகர்; காமம் மிக்கவர் என்ற பொருள்களில் வழங்கப்படுகிறது. திருவீதியில் வரும் இறைவன் அழகைக் கண்டு பக்தர்கள் காமுறும் செயலைக் கொண்டே இறைவனுக்கு "வீதி விடங்கர்" என்ற பெயர் ஏற்பட்டிருக்கவேண்டும்.

இந்து சமயத்தில் தேர்த்திருவிழா போன்று கிறித்தவ சமயத்தில் சப்பரத்திருவிழாவும் நடைபெறுகிறது. அன்னை வேளாங்கன்னித் தேவாலயத்தில் நடைபெறும் சப்பரத் திருவிழா சிறப்புடையது. வேளாங்கன்னிக்கோயில் கடலோர மணற்பரப்பாகத் திகழ்வதால் அலங்கக்கப்பட்ட சப்பரத்தில் மாதாவை வைத்துத் தூக்கி வருவர்.

சிற்பக் கலைக்கூடம்:

இறைவன் திருவீதி உலா வரும் வாகனமாகத் திகழும் தேர், சிற்பக் கலைக்கூடமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு கோயில்களிலும் உள்ள தேர்களில் அந்தத் திருத்தலத்தின் புராணச் செய்திகளுடன் தொடர்புடைய திருவுருவங்கள் சிற்பமாக இடம்பெறுகின்றன. சென்னை கபாலீசுவரர் திருக்கோயிலில் உள்ள தங்கத்தேரில் "புன்னை மரத்தின் கீழ் மயில் உருவில் கற்பகம்பாள் அமர்ந்து இலிங்க வடிவில் உள்ள ஈசனை வழிபடும் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர்கோட்டச் சிற்பத் தேரின் மையப்பகுதியில் 133 குறட்பாக்களின் பொருள் விளக்கம் தரும் வகையில் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. தேர்களில் கடவுளர் சிற்பம், புராண மரபுகளுடன் இதிகாசத் தொடர்புடைய சிற்பங்கள், யானை, குதிரை வீரர் சிற்பம், சங்கநிதி, பதுமநிதி முதலிய நூற்றுக்கும் மேலான சிற்பங்களுடன் காமசூத்திரச் சிற்பங்களும் நிறைந்து தேர் ஒரு சிற்பக் கலைக்கூடமாகத் திகழ்கிறது.

போக்குவரத்திற்கும், போருக்கும் முதலில் பயன்பட்டுவந்த தேர் பின்னர் கடவுளர் அமர்ந்து வீதி உலா வரும் நகரும் கோயிலாக மாறியது. தேர்த்திருவிழாவின் போது கிராம மக்கள் அலங்கக்கப்பட்ட தேரின் முன் அமர்ந்து தங்கள் கிராமங்களுக்கு இடையேயான மரியாதை, மீன்பிடித்தல் போன்ற தகராறுகளைப் பேசித் தீர்த்துக்கொள்வர். இவ்வாறாக "ஊர் கூடித் தேர் இழுத்தல்" என்ற வழக்குத் தோன்றி, தேர் என்னும் கருவி சமுதாய ஒற்றுமையை வளர்க்கும் சாதனமாகத் திகழத் தொடங்கியது. ஆனால் இன்று அந்தச் சமுதாய ஒற்றுமைச் சாதனத்தை இழுப்பதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அதுவே ஒற்றுமையைச் சிதைக்கும் சாதனமாகிவிட்டது. சிற்பக் கலைக்கூடமாக மட்டுமின்றி, சமுதாய ஒருமைப்பாட்டுச் சாதனமாகவும் திகழும் தேர் செல்லும் வீதிகளில் இன்று இரத்த ஆறு ஓடும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்பது வருத்தத்திற்குய செய்தியாகும்.